இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்வதற்காக பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் மூன்று அறங்காவலர்களுக்கு குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு மிகாமலும் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற வேண்டும். இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் ஆகும்.
அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அல்லது தற்காலிகமாக காலியிடம் ஏற்படும் பொழுது அடுத்த அறங்காவலர் குழுநியமனம் செய்யப்படும் வரை, திருக்கோயிலின் அறங்காவலருக்குரிய கடமைகளை செய்திட இடைக்கால ஏற்பாடாக தகுதியான ஒருவர் தக்காராக நியமனம் செய்யப்படுவார்.
இந்துசமய நிறுவனங்களுக்குச் சொந்தமான மனைகள் மற்றும் கட்டடங்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்வதற்கு இந்துசமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி மண்டல இணை ஆணையர், திருக்கோயில் செயல் அலுவலர் / அறங்காவலர் / அறங்காவலர் குழுத்தலைவர், பதிவுத்துறையின் மாவட்டப்பதிவாளர் ஆகியோர் கொண்ட நியாய வாடகை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநியாய வாடகை நிர்ணயக் குழுவின் மூலமாக திருக்கோயில்களுக்கு சொந்தமான வணிகம், குடியிருப்பு போன்ற பயன்பாடுகள் உள்ள மனைகள் மற்றும் கட்டடங்களுக்கு உரிய நியாய வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அற நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்வதிலும் வாடகை வசூல் செய்வதிலும் இடைக்காலத்தில் ஏற்பட்ட பின்னடைவினை நியாய வாடகை நிர்ணயக் குழுவின் மூலமாக விரைவில் சரி செய்து வருவாயை பெருக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்து சமய அற நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான வருவாய் துறை ஆவணங்களில் தவறாக பதியப்பட்டுள்ள விவரங்களை சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.