புதுச்சேரி பிரதேசத்திலுள்ள 243 ( கோயில்கள் & மடங்கள்) கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிட இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு என்ற ஒரு துறை நிறுவப்பட்டுள்ளது. இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1972 மற்றும் விதிகள் 1975ல் அளித்துள்ள அதிகாரத்தின்படி அறங்காவல் குழுக்கள் / சிறப்பு அதிகாரிகள் / நிர்வாக அதிகாரிகள் இத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோயில்களையும் நிர்வகித்து வருகின்றனர். புதுச்சேரியை "வேதபுரி" என்றும் "அறிவின் நகரம்" என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. அருள்மிகு அகத்திய மாமுனிவர், இமயமலையிலிருந்து தெற்கு நோக்கி பயணித்து, தமிழர்கள் வாழும் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேதம் கற்பிக்கத் தங்கினார் என்று நம்பப்படுகிறது. சித்தர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் இருப்பிடமான புதுச்சேரி பலகோயில்கள் அமையப் பெற்ற ஒரு புண்ணிய பூமியாகும். பழமையும் புதுமையும் ஒருங்கே அமையப் பெற்றது புதுச்சேரியின் சிறப்பாகும். புதுச்சேரியின் மையப் பகுதியில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் மற்றும் காரைக்காலைச் சார்ந்த திருநள்ளாரிலுள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயிலைப் போன்ற பிரசித்திப் பெற்ற ஆலயங்கள் இந்தப் புதுச்சேரி ஆட்சிப்பரப்பில் அமைந்துள்ளது யாவரும் நன்கு அறிந்ததே. மேலும், பிரசித்திப்பெற்ற பழமை வாய்ந்த கோயில்களான பாகூரில் அமைந்துள்ள ஸ்ரீ மூலநாதசுவாமி ஆலயம், வில்லியனூரில் உள்ள ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை ஸ்ரீ திருகாமீஸ்வரர் கோயில் மற்றும் புதுச்சேரியின் மையப் பகுதியில் உள்ள ஸ்ரீ காளத்தீஸ்வரர் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயம் பற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு கொண்டுவரவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியின் கலாச்சராம் மற்றும் பண்பாடு அறியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்துறை இதன்மூலம் பெரும் முயற்சி எடுத்துவருகிறது